சென்சாரின் கிடுக்கிப்பிடி கலங்கும் திரையுலகம்

0
Tamil Film industry's struggle against Censor Board

தமிழ் திரையுலகம் ஏற்கனவே பெரும்பாலான படங்களின் தொடர் தோல்வி, டிக்கெட் விலை உயர்வால் குறையும் மக்கள் எண்ணிக்கை போன்ற பிரச்சனைகளால் விழி பிதுங்கி நிற்கும் நிலையில் சென்சார் போர்டின் செயல்களும் நாளுக்கு நாள் திரை வட்டாரத்தை கலங்கடித்து வருகின்றது. தணிக்கை குழு அளிக்கும் சான்றிதழ் மூலம் படங்களின் தலை எழுத்து இருக்கும் நிலை உருவாகி வருகிறது.

இந்த நவீன யுகத்தில் இணையம் மூலம் இளைஞர்கள் அனைத்தையும் அறிந்து கொள்ள பரவலான வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. மொபைலில் ஒரு தட்டு தட்டினால் கெட்டு போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள நிலையில் திரைப்படங்கள் மூலம் மட்டும் தான் இளைய சமுதாயம் கெட்டு போகும் என்று சொல்வது வேடிக்கையான ஒன்றாக திரை வட்டாரம் கருதுகின்றது.

இதை பிரதிபலிக்கும் வகையில் இயக்குனர் ராம் தன் இயக்கத்தில் வெளி வர இருக்கிற தரமணி படங்களின் போஸ்டரில் சென்சார் போர்டு அவலத்தை நையாண்டி செய்து இருந்தார். ஒரு ஆண் ராவாக மது அருந்தினால் “U/A” எனவும் அதுவே ஒரு பெண் ராவாக அருந்தினால் “A” எனவும் தணிக்கை கூறியதை அப்படியே தன் பட போஸ்டரில் விளம்பரம் செய்து விட்டார்.

இதே போன்று நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் நடிப்பில் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் இயக்குனர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவான ஒரு பக்க கதை– யும் சமீபத்தில் தணிக்கைக்கு சென்றது. படத்தை பார்த்தவர்கள் படத்தில் ‘உடலுறுவு’ என்ற சொல் வருவதாகவும் அதனால் படத்திற்கு “U/A” சான்றிதழ் தருவதாகவும் தெரிவித்து இருக்கிறார்கள்.

அதிர்ச்சி அடைந்த இயக்குனர் ஒரு நாளிதழ் பேட்டியில் தான் எந்த விதமான வன்முறை காட்சிகளும் படத்தில் வைக்க வில்லை என்றும் அத்தகைய சொல்லாடல் படத்தின் கதைப்போக்கை தீர்மானிக்கும் விதத்தில் உருவாக்க பட்டது என்று கூறி இருக்கிறார். மேலும் இதை மறுபரிசீலனை செய்ய தணிக்கை குழுவிடம் கூறி இருக்கிறார்.

ஒரு வருடம் முன்பு சூப்பர்ஸ்டார் நடிப்பில் பெருவெற்றி பெற்ற கபாலி திரைப்படத்தில் பல வன்முறை காட்சிகள் இருந்தும் படத்திற்கு “U”- சான்றிதழ் வழங்கியதும் முக்கிய கருத்தை வலியுறுத்தும் படம் ஆன மெட்ரோ படத்திற்கு “U” சான்றிதழ் மறுக்கப்பட்டதும் சென்சார் போர்டின் மீது நம்பிக்கை இழக்கும் செயலாக தான் பார்க்கப்படுகிறது. பணம் இருக்கும் இடத்தில இது போன்ற பிரச்சனைகள் இருப்பதில்லை என்றும் இதற்கு பலி ஆவது பெரும்பாலும் சின்ன பட்ஜெட் படங்கள் தான் என்று சம்பந்தப்பட்டவர்கள் குமுறுகின்றனர்.

Kabali

கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் சென்சார் போர்டு கழுத்தை மிதிப்பதாக கருதும் படைப்பாளர்களின் கோரிக்கைகளை சார்ந்தோர்கள் செவி சாய்த்தல் அவசியம்.
தணிக்கை சான்றிதழ் தான் இது போன்ற சிறு படங்களின் வணிக வசூலை நிர்ணயிக்கின்றது என்ற உண்மையை கருத்தில் கொண்டு சென்சார் போர்டு நிர்வாகம் செயல்பட்டால் தமிழ் திரையுலகத்திற்கு நல்லது.

இயக்குனர் ராம் கூறியது போல சென்சார் போர்டு என்பது ஒன்றும் வானத்தில் இருந்து குதித்த ஒன்று அல்ல நம் சமூக கட்டமைப்பில் இருந்து உருவான ஒன்றே; நாம் எப்படி இது போன்ற விஷயங்களை கையாளுகிறோமோ அதே போக்கு தான் அதிலும் கடைபிடிக்கிறது எனவே மேம்போக்கான மனநிலையை மாற்றும் எண்ணம் நம்மில் இருந்து ஆரம்பிக்க பட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here