Vijay Birthday Special: இளையதளபதியின் மறக்க முடியாத காதல் காட்சிகள்

0

இளையதளபதி விஜய் அவர்கள் இன்றோடு (ஜூன் -22) 43-ஆவது வயதில் அடி எடுத்து வைக்கிறார். அவர் திரை உலகில் ஜொலிக்க ஆரம்பித்து ஆண்டுகள் ஆனாலும் இன்றும் கல்லூரி மாணவன் போன்று இளமையாக இருக்கிறார். அந்த இளமைக்கு காரணம் இன்றும் அவர் படங்களில் அவருக்கென்ன உருவாக்கப்பட்டிருக்கும் இளமை துள்ளும் காதல் காட்சிகள் தான் என்றால் அது மிகை இல்லை.

ஆரம்ப காலங்களில் இளைஞர்களின் மனதை கவர காதல் சார்ந்த படங்கள் மட்டுமே நடித்து வந்த விஜய், பின்பு நகைச்சுவை, ஆக்க்ஷன் ,மற்றும் சமூக நலன் சார்ந்த படங்களில் கவனம் செலுத்தினாலும் அவரின் தோற்றத்திற்கேற்ற குறுகுறுப்பும் இளமை துள்ளும் காதல் காட்சிகளில் இன்று நடித்தாலும் நமக்கு  அது ஒரு நெருடாலாகவே தோன்றுவதில்லை. அதனால் தான் இந்த வயதிலும் அவரை கல்லூரி மாணவனாகவும் ஏற்று கொண்டு அவரின் நடிப்பில் நம் மனம் லயிக்கிறது.

இளையதளபதி, நண்பனின் காதலுக்காக ,அப்பாவின் காதலுக்காக என்று பல ரூபங்களில் காதல் சார்ந்த காட்சிகளில் நம்மை கவர்ந்து இருப்பார், அப்படி அவரின் படங்களில் வந்த சிறந்த காதல் காட்சிகளை ஒரு தொகுப்பாக கோலிவேர்ல்டு ரசிகர்களுக்கு பரிமாற நினைத்து எழுதியது தான் இந்த பதிவின் நோக்கம்.

1. பூவே உனக்காக

இளைஞர்களை கவரும் வகையில் அதிரடியான காதல் காட்சிகளில் அதுவரை நடித்து வந்த இளையதளபதி, மென்மையான காதல் காட்சிகளுடன் நடித்த முதல் படம்.

தமிழ் சினிமாவில்,விரட்டி விரட்டி பெண்களை ஹீரோக்கள் காதல் செய்து கொண்டிருந்த நேரத்தில் தன் ஒருதலை காதலை தன் மனதிற்குள்ளே வைத்து தான் விரும்பிய பெண்ணின் திருமணத்தன்று அவளிடம் சொல்ல வாய்ப்பு கிடைத்தும் சொல்லாமல் நாகரிகம் காத்து எங்கிருந்தாலும் வாழ்க என்று காதலை வாழ வைக்க செய்யும் அந்த கிளைமாக்ஸ் காட்சியும்  விஜய்யின் அந்த நடிப்பும் அன்றைய இளைஞர்களுக்கு ஒரு பாடமாகவே இருந்தது

“ஆசை காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம்  ஆகுமே”

என்று தான் காதலித்த பெண்  திருமணத்தில் தன் ஏக்கத்தை வெளிப்படுத்தாமல் அவளை வாழ்த்தி பாடும் இளையதளபதி பெண் ரசிகர்களை கவர ஆரம்பித்த நேரம்.

2. ஒன்ஸ் மோர்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் விஜய் நடித்த முதல் படம் ஒரே படம். ஆங்காங்கே பல நல்ல காட்சிகள் படம் முழுக்க இருந்தாலும் தன் வளர்ப்பு அப்பாவின் காதல் மனைவியை சந்தித்து அவரிடம் விஜய் விவரிக்கும் அந்த காட்சி தமிழ் சினிமாவிற்கு மிகவும் புதிது.

“நதி எங்கே போகிறது கடலை தேடி”

என்ற அவரின் பாடலை அவருக்கே பாடி காட்டி தனக்கே உரிய குறும்பில் சிவாஜியை சீண்டி விட்டு பின் விஜய்  விவரிக்கும் காட்சி மிக சுவாரசியமானது தன்னை பிரிந்து வாழும் மனைவியை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமும் ஏக்கமும் உள்ள சிவாஜி இன்னும் தன் மனைவிக்கு தன் மேல் மேல் கோவம் குறையவில்லை என்று தெரிந்து உடையும் அந்த நடிப்பும் அதை பார்க்க முடியாமல் தவிக்கும் விஜயின் நடிப்பும் ரசிகர்களை நெகிழ செய்தது.

3. காதலுக்கு மரியாதை

காதலுக்கு ஒரு புது பரிணாமம் கொடுத்த படம். இளையதளபதியின் முக்கியமான படங்களில் இதுவும் ஒன்று. இளைஞர்கள் பெண் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் அணைத்து தரப்பினரையும் தன் பால் ஈர்க்க வைத்த படம். வீட்டை வீடு ஓடி போன காதலர்கள் பின் பெற்றோர்களுக்கு முக்கியத்துவம் தந்து பிரிந்து போக நினைத்து பின், அவர்களின் காதலை புரிந்து கொண்டு பெற்றோர்களே அவர்களின் ஆசையை பூர்த்தி செய்யும் அந்த கடைசி காட்சி ஒவ்வொரு உண்மை காதலர்களும் இப்படி தங்கள் பெற்றோர்கள் இருக்க வேண்டும் என்று ஏங்க வைத்தது.

விஜய்யும் ஷாலினியும் காதல் பிரிவில் அனைவர் முன்னிலையிலும் அமைதியாக துடிக்க, விஜய்யின் அம்மாவான ஸ்ரீ வித்யா இப்படி ஒரு மருமகள் எனக்கு வர வேண்டுமே என்று ஷாலினியை பார்த்து ஏங்க, கடைசியாக ஷாலினி அம்மா லலிதா

“அவளை நீங்களே கூட்டிட்டு போய்டுங்க “

என்று தன் மகளின் விருப்பத்திற்கு பச்சை கொடி காட்டி அழும் அந்த இடம் படம் பார்க்கும் அனைவரையும் கண் கலங்கி நெகிழ செய்யும்.

4. குஷி

எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளிவந்த இப்படம். மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்ததற்கு மிகப்பெரிய காரணம் தொய்வில்லாத திரைக்கதையும் விஜய் ஜோதிகாவின் துரு துரு நடிப்பும்.

படத்தின் பெரும்பாலான காட்சிகளும் சிறப்பாக இருந்தாலும் அனைவர் மனதினையியும் கவர்ந்தது விஜய் குடிபோதையில் ஜோதிகாவை திட்டுவது போல் அமைந்த காட்சி என சொல்லலாம். அதுவும் அவர் திட்டிக்கொண்டு இருக்கும் போதே ஜோதிகா அந்த இடத்திற்கு வந்து அவர் மேல் கோபம் கொள்வதும் அதுக்கு விஜய் அமைதியாக பம்முவதும் காதல் கலந்த சிறப்பு நகைச்சுவை காட்சி.

5. ஷாஜகான்

தான் காதலித்த பெண் தன் நண்பனை காதலிக்கிறாள் என்று முதலில் அதிர்ந்து உருக்குலையும் விஜய், பின்பு உண்மை காதலை சேர்த்து வைக்கும் அந்த கடைசி கிளைமாக்ஸ் காட்சி மிகப்பெரிய சவாலான ஒன்று.

பூவே உனக்காக படத்தை நினைவூட்டினாலும் பல்வேறு வித்தியாசங்களை முன்னிலைப்படுத்தி இப்படி ஒரு தையிரியமான காட்சியை வைத்ததற்கு இயக்குனருக்கும் அதை ஏற்று கொண்ட விஜய்க்கும் ஒரு சபாஷ்.

தன் காதல் தோல்வி ஒரு பக்கம் மனதையும்,எதிரிகளின் கத்தி தன் முதுகையும் காயப்படுத்திவிட்ட நிலையிலும்

“உண்மை காதல் னா சொல்லு என் உயிரை கொடுக்கறேன்”

என்று அவர்  பேசும் அந்த கடைசி வசனம் ரசிகர்களின் மனதில் விஜய்  நீங்கா இடம் பிடித்து விட்ட நேரம்.

6. துள்ளாத மனமும் துள்ளும்

கடைசி காட்சியில் தன்னை பாதுகாத்து தன் பார்வை கிடைக்க காரணம் ஆன குட்டி தான் இவர் என்று சிம்ரனுக்கு விஜய் பற்றி தெரிய வரும் காட்சி மிக அருமையான ஒன்று.

“இன்னிசை பாடி வரும் ” பாடல் இந்த படத்திற்கு பிறகு பட்டி தொட்டி முதல் சிட்டி வரை பிரபலம்.

தன் வாழ்க்கையை உயர்த்திய குட்டி என்பவர் இவர் தான் என்று தெரிந்த கொண்டு ஆவலும் குற்ற உணர்ச்சியுடன் ஓடி வரும் சிம்ரன் ஒரு பக்கம்;

அடி உதை வாங்கி ரத்தம் சிந்திய தருவாயில் தன்னை ஏற்று கொள்வாளா என்ற ஏக்கத்தோடு பாடும் விஜய் ஒரு பக்கம்; என்று இருவரும் போட்டி போட்டு கொண்டு நடித்து இருப்பர்.

7. பத்ரி

சிறு வயதிலுருந்தே தன்னுடன் பழகிய தோழி தன்னை காதலித்து வருகிறாள் என்று டைரி மூலம் விஜய் அறிந்து கொள்ளும் காட்சி. 

இப்படத்தில் பூமிகாவின் கதாபாத்திரம் மிக வித்தியாசமானது. மென்மையான, நல்ல குணம் கொண்ட, அதிர்ந்து பேசாத பெண்ணாக வரும் பூமிகா விஜய் மீது தான் கொண்டிருக்கும் காதலை எத்தனையோ முறை சொல்ல நினைத்து அதில் தோல்வி கண்டு உள்ளுக்குள் புழுங்குவார்.

அதை அறிந்து கொண்டு பின்பு விஜய் இதுவரை நட்புடன் பார்த்த பார்வை காதலாக மாறி  கண்டுகொள்ளாமல் விட்ட குற்ற உணர்ச்சியுடன் விஜய் ஏங்கி தவிப்பார்.

8. தமிழன்

இப்படத்தில், இளைஞர்களை கவரும் வகையில் அதே சமயம் எல்லை மீறாத “லப்டப்பதி” என்ற காதல் டெக்னிக்- ஐ இளையதளபதி பலூன் மூலம் கையாண்டிருப்பார்.

இப்பொழுது உலக புகழ் பெற்றிருக்கும் பிரியங்கா சோப்ரா தமிழில் அறிமுகமாகி நடித்த ஒரே படம். காதலை ஒருவருக்கொருவர் தெரிவிக்காமலே லப்டப்பதி மூலம் உணர்ச்சிகளை மேலெழுப்பி சிலிர்க்க வைக்கலாம் என்று ரசனையாக சொல்லி இருப்பார் இயக்குனர்.

காதலர்கள் இருவரின் மூச்சுக்காற்றும் ஒன்று சேர்ந்து பலூனில் இருந்தால் வெகு தூரத்தில் இருக்கும் காதலர்களுக்கு கூட  இடையே காதல் சுரப்பிகள் சுரந்து ஏங்க வைக்கும் என்ற இந்த ஐடியா அன்று இருந்த காதலர்களிடையே வைரல் ட்ரெண்டிங் ஆனது.

9. சச்சின்

Credit: Sharan FX

துரு துரு விஜய் ,குறு குறு ஜெனிலியா என்று படம் முழுக்க இளமை ஊஞ்சலாடும் இவர்களின் நடிப்பும், காதலோடு ஒன்றி போக வைக்கும் திரைக்கதையும் இப்படத்தை தமிழ் சினிமாவின் மிக சிறந்த காதல் படங்களில் ஒன்றாக தக்க வைக்க செய்தது.

படம் முழுக்க விஜய்யுடன் சண்டை போட்டு கொண்டு இருக்கும் ஜெனிலியா, உண்மையாக காதலிக்க ஆரம்பித்து, அதை சொல்ல நினைத்து ஆனாலும் தான் இறங்கி வர கூடாது என்று  ஈகோவால் தயங்கி வெளிக்காட்டாமல் காதலை அடக்கி கொண்டிருக்கும் காட்சி.

“இத்தனை நாள்- ல என்னைக்காவது ஒரு நாள், ஒரு நிமிஷம், ஒரு செகண்ட் உனக்கு என் மேல லவ் வரல ஷாலினி ?”

என்று விஜய் நிறுத்தி நிதானமாக கேட்டும் மனதிற்குள் உள்ள கோடி ஆசைகளை சொல்ல தெரியாமல் ஜெனிலியா பார்க்கும் அந்த பார்வை ஒரு ஐ-க்கூ  கவிதை. இந்த காட்சிக்கு பிறகு படத்தில் வரும் ஒவ்வொரு நொடியும் சச்சினும் ஷாலினியும் ஒன்று சேர வேண்டும் என்று ஏங்கி தவிக்கும் ரசிகர்களின் எண்ணமே இந்த காட்சியின் வெற்றி.

10. தெறி

சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் திருமணமான பெண் ஆக சமந்தா தனது கனவுகளை கணவனான விஜய்யிடம் சொல்லும் இந்த காட்சியில் ஒட்டுமொத்த குடும்ப பெண்களும் தங்களை நினைத்து பார்க்க கூடும்.

“பேபி இவ்வளுவுதானா உன் ட்ரீம்? “

என்று விஜய் கேட்கும் இடம் ஒரு  காதலன் ஆதரவான பொறுப்பான கணவனாக மாறும் தருணம்.

பின்பு சமந்தா சாகும் தருவாயில்,

“நான் உனக்கு எப்படி பட்ட மனைவி” என்று கேட்கையில்,

வெடித்து அழுது,

“நீ எனக்கு இன்னொரு அம்மா மா “என்று விஜய் சொல்லும் பொழுது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி கண்ணீர் வடிக்க வைத்தது.

இப்படி பல வகையில் பல காட்சிகளில் இளையதளபதி இளமையோடு காதல் காட்சிகளில் நம்மை இன்றளவும் குதூகலப்படுத்தி வருகிறார்.

“The Curious case of benjamin button “என்ற ஆங்கில படத்தில் கதாநாயகனாக வரும் பிராட் பிட் -க்கு  வயது ஆக ஆக இளமை கூடி கொண்டே போகும்.அது போலவருடா வருடம் வயது குறைந்து கொண்டு ,இளமை ஏறி கொண்டே  இருக்கும் நம் இளையதளபதிக்கு

எங்கள் இதயம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here